வவுனியா-நெளுக்குளம் பகுதியில் மாடுகள் கடத்தல்: பொலிஸார் மீது குற்றச்சாட்டு..!
வவுனியா-நெளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவாக மாடுகள் கடத்திச் செல்லப்படுகின்ற சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று(13.06.2023) கலந்துரையாடும் போதே குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா-நெளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவாக மாடுகள் கடத்திச் செல்லப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அத்துடன் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
எனவே அவரை இடமாற்றி ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் அளித்த மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், மாடுகள் களவாடப்பட்டுள்ளமை தொடர்பாக நேற்றையதினம் (12.06.2023) கைதுசெய்யப்பட்ட இருவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளோம்.
அத்துடன், இச்சம்பங்கள் தொடர்பாக தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுக்கு விரோதமாக செயற்பட்டிருந்தால், அது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பரிசீலிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இன்றைய அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியூதீன்,செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம்,பிரதம செயலாளர் சமன்பந்துலசேன,மாவட்ட அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள், பிரதேச செயலர்கள்,திணைக்கள தலைவர்கள், பொலிஸார் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.