மன்னாரில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு - கொலை என சந்தேகம்..!
மன்னார் காவல்துறைப் பிரிவில் உள்ள செல்வ நகர் கிராம சேவையாளர் பிரிவில் மக்கள் நடமாட்டம் இல்லாத குடிசை வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை(11) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மன்னார் செல்வநகர் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள குறித்த குடிசை வீட்டின் உரிமையாளர் வீட்டைப் பார்வையிட சுமார் ஒரு மாதத்தின் பின்னர் கடந்த 11ஆம் திகதி வருகை தந்து தனது வீட்டை பார்வையிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வீட்டில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த வீட்டின் உரிமையாளர் கிராம மக்களிடம் தெரிவித்த நிலையில் சடலம் செல்வ நகரைச் சேர்ந்த காணாமல்போன இரட்ணசிங்கம் கஜேந்திரன் (வயது-35) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை என அவரது உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் மன்னார் காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணத்துவ காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளையும் தடயங்களையும் ஆராய்ந்தனர்.
இதேவேளை மன்னார் நீதவான் மற்றும் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டு சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டதோடு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின் சடலத்தை இந்து முறைப்படி தகனம் செய்யாமல் அடக்கம் செய்யுமாறும், மேலதிக சாட்சியங்களையும் எதிர்வரும் 07.08.2023 அன்று மன்னார் நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

உயிரிழந்த நபர் குறித்த பகுதியில் சில நபர்களுடன் சேர்ந்து மாடு ஒன்றை இறைச்சிக்காக வெட்டியுள்ளார் என்பதன் அடிப்படையில் குழு ஒன்றினால் தேடப்பட்டு வந்ததாகவும், தேடப்பட்டு வந்தவர்களில் மேலும் சிலர் குறித்த குழுக்களால் தாக்கப்பட்டு மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் கடந்த 3ஆம் திகதி மன்னார் காவல் நிலையத்தில் மாட்டுக்கான நஷ்டஈட்டை மாட்டு உரிமையாளருக்கு வழங்கியுள்ளனர்.
அத்துடன் உயிரிழந்தவர் தலைமறைவாக இருந்ததன் காரணத்தால் குறித்த குழுக்களால் தொடர்ந்தும் தேடப்பட்டு வந்ததுடன் அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவியை அச்சுறுத்தி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் அவரது மனைவியால் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது கணவர் கடந்த செவ்வாய்க்கிழமை 4ஆம் திகதிக்கு பிற்பாடு காணவில்லை எனவும் 5ஆம் திகதி மன்னார் காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு தெரிவித்த போதும் காவல்துறையினர் முறைப்பாட்டைப் பெற்றுக் கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டார். மீண்டும் 6ஆம் திகதி சென்று முறைப்பாட்டை பதிவு செய்ததாகவும், இவ்வாறான சந்தர்ப்பத்தில் தனது கணவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்திருப்பதுடன் பலரிடம் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, பரிசோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் நேற்று(13) அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
எனினும் குறித்த இளம் குடும்பஸ்தரின் வீடு தேடிச் சென்று அவருடைய மனைவிக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களே கொலை செய்துள்ளதாகவும் இவ்விடயத்தில் காவல்துறையினர் அசமந்தப் போக்குடன் செயல்படுவதாகவும் அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.