காவல்துறை உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் தம்பதி கைது!
கொழும்பின் புறநகரான பிலியந்தலை காவல்துறை போக்குவரத்து பிரிவிற்கு உட்பட்ட இரு உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெஸ்பேவயில் இருந்து மொரட்டுவை நோக்கிச் சென்ற பாரவூர்தியை நிறுத்துமாறு இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் சமிக்ஞை செய்துள்ளனர்.
எனினும் அஜாக்கிரதையாக ஓட்டப்பட்ட குறித்த பாரவூர்தி நிறுத்தப்படாமல் பயணித்துள்ள நிலையில் காவல்துறை உத்தியோகத்தர்கள் அதனை துரத்திச் சென்றுள்ளனர்.
பின்னர், அந்த பாரவூர்தி அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, அதிலிருந்த ஒரு பெண் உட்பட கிட்டத்தட்ட ஐந்து பேர் கொண்ட குழுவினர், துரத்திச் சென்ற இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களையும் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.