சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார்

சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார்

சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல முக்கிய இடங்களில் கேபிள் கார் (Cable Car) திட்டங்களை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில்   ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (28)  அன்று நடைபெற்ற 'சுற்றுலாச் செயலணிக் கூட்டத்தில்' இது தொடர்பான தீர்மானங்கள் எட்டப்பட்டன.

சிவனொளிபாத மலையை மையப்படுத்தி கேபிள் கார் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு நீண்டகாலமாகப் பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவனொளிபாத மலைக்கு மேலதிகமாகக் கிகிலியாமான மற்றும் எல்ல உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.

இவ்விடங்களில் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், தேவையான ஆரம்பகட்ட அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும், சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

40 நாடுகளுக்கு இலவச விசா

சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் நோக்கில், எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதி முதல் 40 நாடுகளுக்கு 'இலவச விசா' வசதியை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சரணாலயங்களில் சுகாதார வசதி மேம்பாடு

யால உள்ளிட்ட 19 வனவிலங்கு சரணாலயங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக வனஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. தற்போதுள்ள மலசலகூடங்களின் பராமரிப்புப் பணிகள் தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய மலசலகூடங்களை நிர்மாணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் இது மிக முக்கியமானதொரு விடயம் என்பது இங்கு வலியுறுத்தப்பட்டது.

கடற்கரைச் சுற்றுலா வலயம்

கொள்ளுப்பிட்டியிலிருந்து கடற்கரை வீதி ஊடாக, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புதிய சுற்றுலா வலயமொன்றை நிறுவுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 2,000 முதல் 3,000 வரையான மேலதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மல்காந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.