ஆசிரியர் தின நாளில் கேக் பூசிய மாணவர்களுக்கு ஒவ்வாமை!
பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வின் போது கேக் சாப்பிட்டு முகத்தில் கேக் பூசி மகிழ்ந்த 7ஆம் தர மாணவர்கள் ஒன்பது பேர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் வத்துப்பிட்டிவல ஆரம்ப வைத்தியசாலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஊராபொல மத்திய மகா வித்தியாலயத்துக்கு கேக் கொண்டு வரப்பட்டு ஆசிரியர்களுக்கு பரிமாறப்பட்டது. அதன்பின்னர் மாணவர்களும் கேக் சாப்பிட்ட நிலையில் , மாணவர்கள் முகத்திலும், உடலிலும் கேக்கை பூசி மகிழ்ந்தனர்.
அப்போது ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கேக்கை சாப்பிட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டதா அல்லது கேக்கை முகத்தில் தடவி வேடிக்கை பார்த்ததால் பாதிக்கப்பட்டனரா என்ற விவரம் வெளியாகவில்லை.