தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கெண்ணும் பணி ஆரம்பம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கெண்ணும் பணி ஆரம்பம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ம் திகதி நடந்து முடிந்தது. 

234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 64 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. 

இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 4 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 833 வாக்காளர்களில் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். 

2 கோடியே 52 இலட்சத்து 59 ஆயிரத்து 596 பெண்களும், 2 கோடியே 35 லட்சத்து 34 ஆயிரத்து 720 ஆண்களும், 4 ஆயிரத்து 517 திருநங்கைகளும் வாக்களித்தனர். 

இதன் மூலம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஒரு சில தொகுதிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளது. 

சட்டமன்ற தேர்தலில் 3,579 ஆண்கள், 443 பெண்கள், 3-ம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் தேர்தலை சந்தித்தனர். 

எப்போதும் இல்லாத வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் மிகுந்த ஆர்வத்தோடு ஓட்டுப்போட்டு இருக்கிறார்கள். 

இப்படி சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இளைஞர்கள் எழுச்சியுடன் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். முதல் தலை முறை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தவறாமல் இந்த முறை தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கு செலுத்தி இருக்கிறார்கள். 

தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்..? மக்கள் தீர்ப்பு என்ன..? என்பது தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்கெண்ணும் பணிகளுடன் ஆரம்பமானது. 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப்போட்டி நிலவுகின்றது. 

இந்த சூழலில், புதிதாக களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக அளவில் வாக்குகளை பிரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்து வரலாறு படைக்குமா?. அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறுமா?. விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்திற்குள் நுழைவாரா? என்ற கேள்விகளுக்கு இன்று தெளிவான பதில்கள் கிடைத்துவிடும். 

இதையொட்டி தமிழக பொலிஸார் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 18 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பணியில் உள்ளனர். 

இதற்கிடையில் நாளை தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பிறப்பித்து உள்ளார். அனைத்து ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், கமிஷனர்கள், மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்கள் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.