உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், உணவுகளின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எரிவாயு விலை அதிகரிக்குமாயின் உணவு விலைகள் குறித்து மீண்டும் கலந்துரையாட வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை 12 முதல் 15 ரூபாய் வரை மிகக் குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளது.
எனவே எங்களால் உணவு மற்றும் பானங்களின் விலையை அதிகரிக்க முடியாது. உண்மையில் இதை ஒரு சுமையாகக் கருத முடியாது என்பதால் உணவு விலையில் மாற்றம் இருக்காது.
உணவக உரிமையாளர்களிடம் விலையை உயர்த்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் அதிக விலைக்கு உணவு விற்பனை செய்யும் உணவகங்களை முற்றுகையிட்டு, அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கிறோம்.
கடந்த முறை உணவு விலைகள் உயர்த்தப்பட்டபோது முட்டை ஒன்றின் விலை 42 ரூபாயாக இருந்தது.
தற்போது அது சுமார் 26 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல் 1450 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை தற்போது 1250 - 1350 ரூபாய் வரை குறைந்துள்ளது.
இதன் காரணமாக உணவு விலைகள் அதிகரிக்கப்படாது என அவர் நுகர்வோருக்குத் தெரிவித்தார்.
இருப்பினும், எரிவாயு விலை ஏதேனும் ஒரு வகையில் அதிகரித்தால், அது குறித்து ஆலோசித்து உணவு விலையை அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 31 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 'ஃபிரைட் ரைஸ்' மற்றும் கொத்து ஆகியவற்றின் விலை 30 ரூபாயால் அதிகரிக்கப்பட்டது.
ஏப்ரல் 1 முதல் மின்சாரக் கட்டணம் அதிகரித்தமையே இதற்கு பிரதான காரணமாக அமைந்தது.
அத்துடன் தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலையை 5 ரூபாயால் அதிகரிக்கவும் அந்த சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.