மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நெஞ்சறை சத்திர சிகிச்சை.

மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நெஞ்சறை சத்திர சிகிச்சை.

மன்னார் வைத்தியசாலையில் நெஞ்சறை சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

நெஞ்சிலே ஏற்பட்ட பாரிய கத்தி குத்தினால் நெஞ்சுக் குழியினுள் ஏற்பட்ட தொடர் குருதிப்பெருக்கை நிறுத்த சத்திரசிகிச்சை (Emergency Thoracotomy) மேற்கொல்லப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு 35 வயது இளைஞர் ஒருவர் வலது பக்க நெஞ்சு பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் உடனடியாக அவர் சத்திர சிகிச்சை கூடத்துக்கு எடுக்கப்பட்டு வலது பக்க நெஞ்சறையினுள் IC tube எனப்படும் குழாய் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அவருடைய நெஞ்சுக் குழியினுள் வேகமான தொடர் குருதிப்பெருக்கு இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நெஞ்சறை சத்திர சிகிச்சை | Thoracic Surgery Successfully At Mannar Hospitalஇந்நிலையில் அவசரமாக செய்ய வேண்டிய CT scan வசதி மற்றும் நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணத்துவ வசதி என்பன மன்னார் வைத்தியசாலையில் இல்லாத காரணத்தினால் அந்த நோயாளியை யாழ்ப்பாணம் அனுப்புவதாக முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் அவரை வெலிசறை மார்பு நோய் சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு யாழ்ப்பாண வைத்தியசாலையில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோயாளி ஏறக்குறைய 3 லீட்டர் குருதியை இழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருதிப்பெருக்கு மிகவும் வேகமாக இருந்த காரணத்தினால் அவரை நோயாளர் காவு வண்டியில் பிறிதொரு வைத்தியசாலைக்கு அனுப்புவது அவரது உயிருக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மன்னார் வைத்தியசாலையிலேயே நெஞ்சறை சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நெஞ்சறை சத்திர சிகிச்சை | Thoracic Surgery Successfully At Mannar Hospitalபொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் எம். மதுரகீதன் தலைமையிலான சத்திர சிகிச்சை குழுவும், உணர்விழப்பியல் மற்றும் அதி தீவிர சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஜூட் பிரசாந்தன் தலைமையிலான குழுவும் இணைந்து சத்திர சிகிச்சையை மிகவும் வெற்றிகரமாக மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்திய நிபுணர்களினால் சரியான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவினாலும், ஏறக்குறைய மூன்று மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவின் திறமை வாய்ந்த அவசர நிலை பராமரிப்பினாலும், ஒரு இளைஞனுடைய பெறுமதிமிக்க உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்த சத்திர சிகிச்சையின் போது மன்னார் வைத்தியசாலை குருதி வங்கியின் பங்கு மிகவும் அளப்பரியதாகும். மிகப் பெரிய அளவிலான குருதி மாற்றீடு செய்யப்பட்டே இந்த இளைஞனின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

CT scan மற்றும் நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணத்துவ வசதி கொண்ட பெரிய வைத்தியசாலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும் இந்த சத்திர சிகிச்சை அந்த வசதிகள் இல்லாத மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது மிகவும் சிறப்பான விடயமாக கருதப்படுகிறது.