
இலங்கையை உலுக்கிய மாணவி மரணம்; பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பு, தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட 16 வயது பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் இதுவரை 05 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் பிரேத பரிசோதனை நேற்று நடத்தப்பட்டதில், பலத்த காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (8) பிற்பகல் தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்காக பாடசாலை சீருடையில் சென்ற குறித்த மாணவி, சிறிது நேரத்திலேயே பலமுறை தற்கொலைக்கு முயன்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு அறையில் இருந்து 15 முதல் 20 நிமிடங்களுக்குள் அவர் பல தடவைகள் குதிக்க முயற்சித்தமை அங்கிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.
எனினும் இந்த மாணவியின் தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கொழும்பு, கொம்பனி வீதி அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் நெருங்கிய தோழி இந்த சிறுமி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை தனது நண்பர்களின் மரணத்தினால் கடந்த சில மாதங்களாக தனது மகள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக மாணவியின் தந்தை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.