
அவசரத் தேவையை வலியுறுத்தியுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்
புதுப்பிக்கப்பட்ட நிலைத்தன்மை திட்ட வரைபடத்தை, இலங்கையின் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டின் காலநிலை உறுதிமொழிகளை அடைய பசுமை முதலீடுகளை அதிகரிக்க வேண்டிய அவசரத் தேவையை மத்திய வங்கியின் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்ற 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கு 10.85 பில்லியன் டொலர்கள் தேவை என்றும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.
தீவிர வானிலை நிகழ்வுகள் இனி அரிதான நிகழ்வுகள் அல்ல. அவை விதிமுறையாகிவிட்டன. எனவே நிலையான நிதி என்பது ஒரு தேர்வல்ல. அது ஒரு உலகளாவிய தேவையாகும், அத்துடன் அது இலங்கைக்கும் அவசியமானது என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலையால் இலங்கை மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடாக மாறியுள்ளது. தற்போது வரைக்கும் இந்த இழப்புகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.4 வீதம் அல்லது 300 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளன.
இந்த இழப்புகள் 2050 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2வீதமாக அதாவது மூன்று மடங்காக உயரக்கூடும் என்று ஆளுநர் மதிப்பிட்டுள்ளார்.