 
                            யாழ். மாவட்ட அரச அதிபராக பிரதீபன் சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்பு
யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது.
குறித்த பதவியேற்பு நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட அரச அதிபர் ஸ்ரீமோகன் தலைமையில் மதத் தலைவர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள், பிரதேச சபையின் செயலர்கள், மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்துறைசார் பொறுப்பு நிலை அதிகாரிகள் பிரசன்னத்துடன் இன்றையதினம்(24) நடைபெற்றது.
முன்பதாக மாவட்ட செயலகத்துக்கு தனது பாரியாருடன் வருகைதந்த மாவட்ட செயலாளரை, மேலதிக மாவட்ட அரச அதிபர் ஸ்ரீ மோகன் கைலாகு கொடுத்து மாலை அணிவித்து வரவேற்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, சக ஊழியர்களால் வரவேற்கப்பட்ட அரச அதிபர் பிரதீபன் மாவட்ட செயலரின் அதிகாரபூர்வ அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல மாதங்களாக மாவட்ட அரச அதிபர் வெற்றிடம் இருந்துவந்த நிலையில், பதில் அரச அதிபராக கடமையாற்றிவந்த ம.பிரதீபன் சில தினங்களுக்கு முன்னர் யாழ். மாவட்டத்தின் அரச அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்ட பிரதீபனுக்கான நியமனக் கடிதம் கடந்த 20.06.2025 அன்று அமைச்சரவை செயலாளர் திரு. W. M. D. J. பெர்னாண்டோவினால் நியமனக் கடிதத்தை பெற்றிருந்தார்.
இந்நிலையில், இன்றையதினம் கடமையை பொறுப்பேற்ற நிலையில், சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ம.பிரதீபன் 2024 மார்ச் 09ஆம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






 
                     
                                            