கற்பிக்க வந்த இடத்தில் கைவரிசை காட்டிய ஆசிரியர் ; 59 இலட்சம் மோசடி

கற்பிக்க வந்த இடத்தில் கைவரிசை காட்டிய ஆசிரியர் ; 59 இலட்சம் மோசடி

களுத்துறை மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடாத்துவதற்காக வந்து, இரண்டு பெண்களிடம் 59 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் வகுப்புக்களுக்காக வீடுகளுக்குச் சென்று, அங்கிருந்த பெண்களை ஏமாற்றி நகைகளைப் பெற்றுக்கொண்டு மீண்டும் ஒப்படைக்காது மோசடி செய்த 31 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அளுத்கம, கனேகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கற்பிக்க வந்த இடத்தில் கைவரிசை காட்டிய ஆசிரியர் ; 59 இலட்சம் மோசடி | Teacher Who Showed Off Skills Place He Came Teach

இவர் வீடுகளுக்குச் சென்று மாணவர்களுக்குக் கற்பிக்கும் வேளையில், தமக்கு அவசர பணத்தேவை இருப்பதாகக் கூறி பெண்களிடம் நகைகளைப் பெற்றுள்ளார்.

அளுத்கம, கழுவாமோதர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவர், தனது சகோதரனின் பிள்ளைக்குக் கற்பிக்க வந்த இந்த ஆசிரியரிடம் கடந்த 2025 மார்ச் மாதம் 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான 12.5 பவுண் தங்க நகைகளை வழங்கியுள்ளார்.

ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாகக் கூறி வாங்கிய நகைகளை அவர் மீண்டும் ஒப்படைக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது. மேலும், அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய மற்றுமொரு பெண், தனது சகோதரனின் பிள்ளைக்குக் கற்பிக்க வந்த இவரிடம் 2024 நவம்பர் மாதம் 19 இலட்சம் ரூபாய் பெறுமதியான 6.5 பவுண் நகைகளை வழங்கியுள்ளார்.

அவருக்கும் அந்த நகைகள் மீண்டும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட இரு பெண்களும் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைய, களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (12) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.