யாழில் காணி தகராறில் குடும்பஸ்தர் கொலை; ஓட்டமெடுத்த மூன்றாவது நபரும் கைது
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை ஒன்று நிலவி வந்த நிலையில் , பிரச்சனை முற்றி , கைக்கலப்பாக மாறியுள்ளது.
அதன் போது மூவர் இணைந்து தாக்குலை மேற்கொண்டதில் குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அன்றைய தினமே சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , ஏனைய இருவர் தொடர்பிலும் தகவல்களை பொலிஸார் பெற்ற நிலையில் மறுநாள் மற்றைய சந்தேக நபரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மூன்றவது நபர் கைதடி பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , குறித்த நபரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.