'AI' கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முஜிபுர் ரஹ்மான்!
பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எழுதிய 'ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி' நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டதை பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (04) உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த நிகழ்வில் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளவில்லை என்றும், அங்கு அவர் இருப்பது போன்று வெளியான காட்சிகள் 'AI' தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பின்வருமாறு கருத்து வெளியிட்டார்:
ஊடகவியலாளர்: "எதிர்க்கட்சித் தலைவர் ஏன் இடையில் எழுந்து சென்றார் என்று தெரியுமா?"
முஜிபுர் ரஹ்மான்: "அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்."
ஊடகவியலாளர்: "அவர் நிகழ்வில் கலந்துகொண்டாரா?"
முஜிபுர் ரஹ்மான்: "ஆம், அவர் கலந்துகொண்டிருந்தார்."
ஊடகவியலாளர்: "உங்கள் கட்சியின் சில உறுப்பினர்கள் அது 'AI' மூலம் செய்யப்பட்டது என்கிறார்கள்.. அவர் கலந்துகொண்டதை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்களா?"
முஜிபுர் ரஹ்மான்: "அவர் கலந்துகொண்டார் என்று பொதுச்செயலாளரே கூறிவிட்டாரே."
உதய கம்மன்பில எழுதிய இந்த நூல் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பாதுகாப்புப் பிரிவு பிரதானிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.