மே 30 ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை இல்லை

மே 30 ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை இல்லை

2026-ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

2026-ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட 2025.05.27 திகதியிட்ட 2438/22 இலக்க வர்த்தமானி அறிவித்தல் இதுவரை திருத்தப்படவில்லை என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

இவ்வருட வெசாக் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாள் விடுமுறையா? என பல தரப்பினரும் வினவியதாக தொழிலாளர் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

அதன்படி, 1954-ஆம் ஆண்டின் 19-ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் சட்டத்தின் 7-வது பிரிவின் விதிகளுக்கு இணங்க, 1996.10.14 திகதியிட்ட 954/1 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட சட்டரீதியான விடுமுறை நாட்களின் எண்ணிக்கை எட்டாகும் என அவர் விளக்கமளித்துள்ளார். 

அந்த விடுமுறை நாட்களில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதன்படி, 2026-ஆம் ஆண்டில் பின்வரும் தினங்கள் மட்டுமே பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன: 

ஜனவரி 15 வியாழக்கிழமை - தைப்பொங்கல் தினம் 

பெப்ரவரி 04 புதன்கிழமை - சுதந்திர தினம் (தேசிய தினம்) 

ஏப்ரல் 13 திங்கட்கிழமை -தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முந்தைய தினம் 

ஏப்ரல் 14 செவ்வாய்க்கிழமை - தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு தினம் 

மே 01 வெள்ளிக்கிழமை - சர்வதேச தொழிலாளர் தினம் 

மே 02 சனிக்கிழமை - வெசாக் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாள் 

ஓகஸ்ட் 26 புதன்கிழமை - மீலாதுன் நபி (முகமது நபியின் பிறந்ததினம்) 

டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை - நத்தார் தினம் 

மேற்குறிப்பிட்ட தினங்கள் மட்டுமே 2026-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.