புத்தாண்டுக்கு மாகும்பர பஸ் நிலையத்தின் ஊடாக 55 ஆயிரம் பயணிகள் பயணம்

புத்தாண்டுக்கு மாகும்பர பஸ் நிலையத்தின் ஊடாக 55 ஆயிரம் பயணிகள் பயணம்

கடந்த 8ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 55,000 பயணிகள் மாக்கும்புர பல்நிலை போக்குவரத்து நிலையத்திலிருந்து தமது ஊர்களுக்குச் சென்றுள்ளனர். 

நேற்று (11) அதிகளவான மக்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் திட்டமிடல் பணிப்பாளர் ஆலோகா கருணாரத்ன தெரிவித்துள்ளார். 

மாக்கும்புர பல்நிலை போக்குவரத்து நிலையத்தின் இன்றைய திட்டமிட்ட பேருந்து சேவைகளைக் கண்காணிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், 

பயணிகள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 

மாக்கும்புர பல்நிலை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை புறப்படும் வகையில் தூர இடங்களுக்கான பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

திட்டமிட்டபடி இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. 

சில பேருந்துகள் மூன்று தடவைகள் வரை தமது சேவைகளை முன்னெடுக்கின்றன. நேற்றைய தினம் (11) அதிகளவான பயணிகள் பயணித்த நாளாகப் பதிவாகியுள்ளது. 

கடந்த 8ஆம் திகதி முதல் இதுவரை மாக்கும்புர போக்குவரத்து மத்திய நிலையத்தின் ஊடாக மட்டும் சுமார் 55,000 பயணிகள் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுள்ளனர். 

அதேபோல், புத்தாண்டுக்கு பிந்திய போக்குவரத்துத் திட்டத்தின் கீழ், ஏப்ரல் 16 முதல் 21 வரை கிராமங்களிலிருந்து கொழும்பு திரும்புவதற்காகவும் இந்த விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இதற்கு இணையாக, ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையுடன் இணைந்த சேவையின் கீழ் பயணிகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.