தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று (ஏப்ரல் 23) ஒரே கட்டமாகப் பொதுத்தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தத் தேர்தலில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதற்காக மாநிலம் முழுவதும் 75,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதிகாலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.
முக்கிய அரசியல் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் நேரடி ஒளிபரப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் மே 4-ஆம் திகதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே புதிய அரசு அமைப்பதற்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தத் தேர்தலின் தொடக்கத்திலேயே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த நிகழ்வு, நடிகர் அஜித்குமார் தனது வாக்கைச் செலுத்தியதுதான்.
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே (காலை 6:40 மணிக்கே) அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் வருகை தந்தார்.
வாக்குப்பதிவு தொடங்கியதும், அந்த மையத்தின் முதல் நபராக தனது வாக்கைச் செலுத்தி அஜித்குமார் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் அவர் அதிகாலையிலேயே வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.