பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை – போலீஸ் எச்சரிக்கை
பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகளில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, பொலிஸாரும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சோதனைகளில், சில பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழி மூலமாகவோ புகார்கள் கிடைத்தால், மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகனச் சட்டத்தின் 173ஆம் பிரிவின்படி, பேருந்து உரிமையாளர், சாரதி அல்லது நடத்துனர் எவரும் அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட கட்டணத்தை மீறி கூடுதல் தொகையை கோரவோ அல்லது பெறவோ முடியாது.
இந்த விதியை மீறுபவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவையின் 372, 398 மற்றும் 386 பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டும் என்றும், சட்டவிரோதமாக அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் குறித்து 118 அல்லது 119 என்ற அவசர எண்கள் வழியாகவும், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலும் புகார் அளிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.