’ஜனாதிபதியின் பேச்சு போல டொலரும் மாறுகிறது’

’ஜனாதிபதியின் பேச்சு போல டொலரும் மாறுகிறது’

 "ஜனாதிபதியின் பேச்சு போன்று டொலரின் பெறுமதி நேரத்திற்கு நேரம் மாறிக்கொண்டிருக்கிறது. இன்று சந்தையில் டொலர் இல்லை; வங்கிகளுக்கிடையிலும் அதன் பெறுமதி முரண்பாடாக உள்ளது. 

டொலர் மதிப்பு உயர்வால் பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இவ்வாறான பணவீக்கத்தால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஆனால், இதற்கெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறும் அரசாங்கம், செவ்வாய்க்கிரகத்தில் இருந்து பேசுகிறதா என்று கேட்கத் தோன்றுகிறது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) உரையாற்றிய அவர் "ஒருவர் வாழ்வதற்கு மாதத்திற்கு 16,571 ரூபாய் போதும் என்று நிதிப் பிரதி அமைச்சர் கூறுகிறார். இது வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கான கணக்கீடு. உலக வங்கியின் தரவுகளின்படி, ஒரு தனிநபர் வாழ மாதம் 40,950 ரூபாவும், நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 163,000 ரூபாவும் தேவைப்படுகிறது. அரசாங்கம் வழங்கும் தரவுகள் மக்களின் உண்மை நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை."

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் டொலர் நெருக்கடியின் போது இவ்வாறே கருத்து தெரிவித்ததாகவும், அதன் விளைவாகவே முழு நாடும் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், அதே போன்றதொரு ஆபத்தான நிலையை நோக்கியே தற்போதைய அரசாங்கம் பயணிப்பதாகவும் எச்சரித்தார்.