ஆசிரியர்கள் தங்களைத் தரம் உயர்த்திக்கொள்ள வேண்டும்! - கல்வியாளர் துளசிதாசன்
பள்ளி வளாகத்தில் இலக்கியவாதிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் இடம் அளிப்பதன் மூலம் மாணவர்களின் பார்வையை விசாலமாக்கிவருபவர் திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளித் தலைமைச் செயல் அலுவலர் துளசிதாசன். மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கிய குழு, ஊராட்சி நிலையில் நூலகத்துக்குக் குழந்தைகளுக்கான நூல்கள் தேர்வுக் குழு போன்றவற்றில் இடம்பெற்றவர்.
மாணவர்களின் படைப்புகளைப் புத்தகமாக்குவது, கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதிய புத்தகங்களைப் பதிப்பிப்பது, பள்ளி விழாக்களில் இத்தகையோரைப் பங்குபெற வைப்பது என இயங்கிக்கொண்டிருக்கும் துளசிதாசனுடன் பேசியதிலிருந்து...
Q. ஆசிரியர் பணியை நோக்கிய உங்கள் பயணம் தொடங்கியது எப்போது?
A. பெரியாரின் திருச்சி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தவர் என் அப்பா கலியபெருமாள். பிரிக்கப்படாத தருமபுரி மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமப் பகுதிகளில்தான் அவர் ஆசிரியர் பணி செய்தார். அங்கெல்லாம் அப்போது பெரிய அளவில் போக்குவரத்து வசதியே கிடையாது.
முறையான கட்டிடம் இல்லாத பள்ளிகளில் வேலை செய்தார். பெற்றோர்களின் நம்பிக்கையைப் பெற்று மாணவர்களைத் திரட்டினார். நிறைய சேவைகளையும் செய்திருக்கிறார்.
அவர் பணிசெய்த தேன்கனிக்கோட்டைக்கு நான் சென்றிருந்தபோது, பேருந்தில் என்னிடம் டிக்கெட் வாங்கச் சொல்ல மாட்டார்கள். அவ்வளவு மரியாதை அப்பா மீது. தீவிரமான வாசகரான அவரால்தான் ஆசிரியர் பணி மீது ஆர்வம் பிறந்தது.
அதேபோல் எனது ஆசிரியர்கள் சேகரன், வேதவல்லி, பேராசிரியர் கே.எஸ்.சீதாராமன், ஆர்.ஸ்ரீனிவாசன் போன்றோரும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வில் வெற்றிபெற்றிருந்தாலும், ஆசிரியர் பணியையே நான் தேர்ந்தெடுத்தேன்.
Q. பள்ளி வளாகத்தில் இலக்கியச் செயல்பாடுகளைத் தீவிரமாக முன்னெடுப்பதன் பின்னணி என்ன?
A. என் தாத்தாவின் மைத்துனர் கே.எம்.பெரியசாமி நல்ல வாசகர். முசிறி பக்கத்தில் உள்ள கொளக்குடி கிராமத்தின் ஊர்த் தலைவராக இருந்தவர். 1950களில் பதவியேற்ற கையோடு அவர் செய்த முதல் பணி நூலகம் அமைத்ததுதான். அவர் எங்களுக்கு நிறைய கதைகள் சொல்வார்.
கதையின் முடிவைச் சொல்ல மாட்டார். நூலகத்தில் அந்தப் புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளச் சொல்வார். அப்படித்தான் என் வாசிப்பு வளர்ந்தது. நட்பு வட்டமும் கல்லூரி நாள்களும் அதை வளர்த்தெடுத்தன. திருச்சியின் பண்பாட்டுத் தளத்தில் இயங்கியவர்களுடனான எனது பரிச்சயமும் ஆர்வத்தை அதிகரித்தது.
ஆசிரியர் ஆனதும் மாணவர்களுக்கும் சக ஆசிரியர்களுக்கும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தொடக்கத்திலிருந்தே ஆசைப்பட்டேன். அப்படித்தான் இதெல்லாம் தொடங்கின.