வடக்கே தலை வச்சு படுத்தா மூளை பாதிக்குமா? ரத்த ஓட்டம் மாறுமா? அறிவியல் பூர்வ உண்மை என்ன?

வடக்கே தலை வச்சு படுத்தா மூளை பாதிக்குமா? ரத்த ஓட்டம் மாறுமா? அறிவியல் பூர்வ உண்மை என்ன?

ரத்தமானது காந்த சக்தியால் ஈர்க்கப்படாமல் எதிர்த்திசையிலேயே விலகிச் சென்றது. மேலும், பூமியின் காந்த விசை (25-65 மைக்ரோ டெஸ்லா) என்பது மிக மிகக் குறைவானது என்பதால், அது உடலுக்குள் இதயம் தரும் அழுத்தத்தோடு ஓடும் இரத்தத்தை எவ்வகையிலும் பாதிக்காது.

"வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது, அப்படி படுத்தால் ஆபத்து" என்று நம் வீட்டில் பெரியவர்கள் கூறுவதை நாம் கேட்டிருப்போம். இதற்கு அறிவியல் மற்றும் காந்தப்புலம் சார்ந்த சில காரணங்களும், வாதங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. இந்த வாதங்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை நேரடிச் சோதனைகள் மற்றும் மருத்துவக் கோட்பாடுகள் மூலம் அலசுகிறது இந்தச் செய்தித் தொகுப்பு.

பூமியின் காந்தப்புலம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்கிறது. நாம் வடக்கே தலை வைக்கும்போது, காந்த விசையானது நம் உடலில் உள்ள ரத்தத்தை (இரும்புச் சத்து/ஹீமோகுளோபின் காரணமாக) தலைக்கு அதிகமாக இழுத்துச் சென்று 'பிரைன் ஸ்ட்ரோக்' போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மனித உடலின் மேல் பகுதி (தலை) வட துருவம் போலவும், கீழ் பகுதி தென் துருவம் போலவும் செயல்படுகிறது. இதனால் பூமியின் வட துருவமும் நமது தலையும் ஒன்றோடொன்று எதிர்த்துப் (Repel) பாதிப்பை உண்டாக்கும்.

ரத்தத்தை வைத்து நடத்தப்பட்ட அதிரடி சோதனை

ரத்தத்தில் இரும்புச்சத்து (Iron) இருப்பதால், அது உண்மையிலேயே காந்தத்தால் ஈர்க்கப்படுகிறதா என்பதைச் சோதிக்க, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் உலகின் மிக வலிமையான காந்தங்களில் ஒன்றான 'நியோடிமியம் காந்தம்' கொண்டு சோதிக்கப்பட்டது. ரத்த சாம்பிள் அருகில் மிக வலிமையான காந்தத்தைக் கொண்டு சென்றபோதும், ரத்தம் எந்தவித அசைவையும் காட்டவில்லை; காந்தத்தில் ஒட்டவும் இல்லை. ரத்தத்தை ஒரு டெஸ்ட் டியூபில் ஊற்றி, அதைத் தண்ணீரில் மிதக்கவிட்டு காந்தத்தைக் காட்டியபோது, அது காந்தத்தை நோக்கி வராமல் ஆப்போசிட் சைடில் விலகிச் சென்றது (Repel). ரத்தத்திற்குப் பதிலாக வெறும் தண்ணீரை வைத்துச் சோதித்தபோதும், அதுவும் காந்தத்திற்கு எதிர்த்திசையில் விலகிச் சென்றது.

இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் என்ன? 

இரும்பு போன்ற பொருட்கள் காந்தத்தால் ஈர்க்கப்படுவதை 'பெரோ மேக்னெட்டிசம்' (Ferromagnetism) என்பார்கள். ஆனால், மனித உடலில் பெரும் பகுதி இருப்பது தண்ணீர்தான். தண்ணீரில் உள்ள எலக்ட்ரான் அமைப்பானது, காந்தப்புலத்திற்கு எதிர்த்திசையில் செயல்படும். இதனால் அது காந்தத்தை விட்டு விலகும். இது 'டயா மேக்னெட்டிசம்' என்றழைக்கப்படுகிறது. இரத்தத்தில் இரும்புச்சத்து இருந்தாலும், அது தண்ணீரின் டயா மேக்னெடிக் பண்பை விட மிகக் குறைவு என்பதால் காந்தத்தால் ஈர்க்கப்படுவதில்லை.

பூமியின் காந்த சக்தி நம் உடலை பாதிக்குமா?

பூமியின் காந்த விசை என்பது மிக மிகக் குறைவு. அது வெறும் 25 முதல் 65 மைக்ரோ டெஸ்லா மட்டுமே இருக்கும். ஆனால் சோதனைக்கு நாம் பயன்படுத்திய சிறிய நியோடிமியம் காந்தத்தின் சக்தியோ 1 முதல் 1.2 டெஸ்லா ஆகும் (பூமியை விட 20,000 மடங்கு அதிகம்). பூமியை விட 20,000 மடங்கு அதிக சக்தி கொண்ட காந்தத்தாலேயே, நம் உடலுக்கு வெளியே இருக்கும் ரத்தத்தையோ அல்லது தண்ணீரையோ ஒரு மில்லிமீட்டர் கூட எளிதாக நகர்த்த முடியவில்லை (ஏனெனில் உராய்வு விசை/Friction அதைவிட அதிகம்).

அப்படி இருக்கும்போது, நம் உடலுக்குள் இதயம் தரும் அழுத்தத்தோடும், தசைகளின் உராய்வோடும் நரம்புகளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தத்தை பூமியின் மிகக் குறைந்த காந்த சக்தி எந்த வகையிலும் பாதிக்காது என்பதே உண்மை. மேலும், இந்த லாஜிக் உண்மையாக இருந்தால் பூமியின் வட துருவப் பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்குப் பிரைன் ஸ்ட்ரோக் பாதிப்புகள் தொடர்ந்து வந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்தப் பதிவும் இல்லை.

மூளையின் சிக்னல்கள் பாதிக்கப்படுமா? 

மனித மூளை எலக்ட்ரிக் சிக்னல்கள் மூலம் இயங்குவதால், அதைச் சுற்றி ஒரு காந்தப்புலம் இருக்கும். இது குறித்து 36 மனிதர்களை வைத்து ஒரு பிரத்யேக ஆராய்ச்சி நடத்தப்பட்டது. பூமியின் காந்த சக்தி போன்ற ஒரு சூழலை செயற்கையாக ஏற்படுத்தி மாற்றியபோது, சிலரது மூளையில் உள்ள 'ஆல்பா சிக்னலில்' சிறிய மாற்றம் தெரிந்தது. ஆனால், அடுத்த 2 வினாடிகளிலே மூளை பழைய நிலைக்கு திரும்பிவிட்டது. இதன் மூலம், மூளையானது தன்னை சுற்றியுள்ள காந்தப்புல மாற்றங்களை உணரும் திறன் கொண்டது மட்டுமே தவிர, அதனால் மூளைக்கு எந்த பாதிப்போ, கெட்ட கனவுகளோ ஏற்படுவதில்லை என்று அந்த ஆராய்ச்சி கூறுகிறது. மனித உடல் ஒரு காந்தம் போல் செயல்படுகிறது என்பதும் முற்றிலும் தவறான வாதம்.

குடும்ப வழக்கங்கள், பாரம்பரியம், ஆன்மீகம் அல்லது தனிப்பட்ட மதம் சார்ந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் வடக்கே தலை வைக்காமல் படுப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. ஆனால், வடக்கே தலை வைத்துப் படுத்தால் பூமியின் காந்த சக்தி ரத்த ஓட்டத்தை பாதிக்கும், மூளையைச் சிதைக்கும் என்று கூறப்படும் அறிவியல் வாதங்களில் எந்தவித உண்மையும் இல்லை என்பது தற்போதைய அறிவியல் மற்றும் சோதனைகள் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.