அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர்கள் இருவர் விளக்கமறியலில்!

அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர்கள் இருவர் விளக்கமறியலில்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர்கள் இன்று (02) காலை ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் நாராயணன் பார்த்திபன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட 33 மற்றும் 30 வயதுடைய இரு பெண் உத்தியோகத்தர்களும் 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரை 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் வரை மோசடி செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

நோர்வூட் பிரதேச செயலகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இவ்விரு அரச ஊழியர்களுக்கும் எதிராகத் தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இரு அதிகாரிகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும், மற்றொருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டிருந்தனர். 

அதன்பின்னர் நோர்வூட் பிரதேச செயலாளரினால் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை (31) மாலை இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

இச்சம்பவம் தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களிடம் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதுடன், உள்ளக கணக்காய்வு அதிகாரிகள் ஊடாகத் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அத்துடன், அஸ்வெசும திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கணினிகளும் கணக்காய்வு அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

இச்சம்பவம் குறித்து ஹட்டன் விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.