திலீபன் சிலை அகற்றம் : யாழ். நல்லூரில் ''அணையா விளக்குப் போராட்டம்''

திலீபன் சிலை அகற்றம் : யாழ். நல்லூரில் ''அணையா விளக்குப் போராட்டம்''

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவச் சிலையைப் காவல்துறையினர் அகற்றிச் சென்றமைக்கு எதிராக மற்றுமொரு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய இன்று (30.09.2026) முதல் வெள்ளிக்கிழமை (02) வரை யாழ். நல்லூரில் 'அணையா விளக்குப் போராட்டம்' முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திலீபனின் சிலையை காவல்துறையினர் அகற்றியதைக் கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) திலீபன் நினைவேந்தல் குழுவினராலும், திங்கட்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

 

முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் 

அதனைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக நேற்று (29.09.2026) பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் திலீபன் நினைவாலயம் முன்பாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில், அகற்றப்பட்ட சிலையை மீள அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இன்று முதல் நாளைமறுதினம் வரை  நல்லூரில் 'அணையா விளக்குப் போராட்டம்' முன்னெடுக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று மாலை 5 மணிக்கு நல்லூரில் உள்ள திலீபனின் நினைவாலயம் முன்பாக விளக்கேற்றப்பட்டு, வெள்ளிக்கிழமை வரை அந்த விளக்கை அணைக்காமல் இரவு பகலாகத் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.