ஏரிக்கரையில் கிடைத்த எலும்புகள்: 210 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு

ஏரிக்கரையில் கிடைத்த எலும்புகள்: 210 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு

ஜிம்பாப்வேயில் உள்ள கரிபா ஏரிக் (Lake Kariba) கரையில் 210 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதிய வகை டைனோசர் இனத்தின் புதைபடிவங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஜிம்பாப்வேயின் 'கரிபா ஏரி' கரையில் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்கள் (Fossils) மூலம், சுமார் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, இதுவரை அறியப்படாத புதிய வகை டைனோசர் இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த முக்கியக் கண்டுபிடிப்பு, டைனோசர்களின் ஆரம்பகால பரிணாம வளர்ச்சி குறித்த புதிய நுண்ணறிவுகளை ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கியுள்ளதாக 'பீப்பிள்' (People) இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த இனத்திற்கு ‘முசாங்கோ மாதுசடோனேனிசிஸ்’ (Musango matusadonaensis) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவை லேட் ட்ரையாசிக் காலத்தில், தற்போது வடக்கு ஜிம்பாப்வேயாக இருக்கும் பகுதியில் வாழ்ந்துள்ளன. அக்காலகட்டத்தில்தான் டைனோசர்கள் அளவில் பெரியதாகவும், பல்வேறு வகைகளாக பிரிந்தும் சுற்றுச்சூழல் அமைப்பில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வின் முடிவுகள் 'ஜர்னல் ஆஃப் சிஸ்டமேடிக் பாலியன்டாலஜி' (Journal of Systematic Paleontology) இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு கரிபா ஏரியில் உள்ள ஸ்பர்விங் தீவுக்கு (Spurwing Island) ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட கூட்டுப் பயணத்தின் போது இந்தப் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில் டைனோசரின் பின்னங்கால் பகுதி, அதாவது தொடை, கெண்டைக்கால் மற்றும் கணுக்கால் எலும்புகள் அடங்கும். இந்த எலும்புகள், ஏற்கனவே அறியப்பட்ட டைனோசர்களின் எலும்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்ததால், இது ஒரு புதிய இனம் என்பதை விஞ்ஞானிகள் உறுதிசெய்தனர்.

லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் தொல்லுயிரியலாளர் (Paleontologist) மற்றும் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான பேராசிரியர் பால் பாரெட் இது குறித்துக் கூறுகையில், ஏரிக் கரையில் நடந்து சென்றபோது, நிலத்தில் இருந்து அரித்து வெளியே வந்திருந்த இந்த பின்னங்கால் எலும்புகளைத் தாம் கவனித்ததாகத் தெரிவித்தார். புதைபடிவங்களைத் தோண்டி எடுத்த பிறகு, அந்தப் பகுதியில் தாங்கள் எதிர்பார்க்காத ஒரு புதிய வகை டைனோசர் இது என்பதைத் உணர்ந்ததாக அவர் கூறினார். மேலும், தனது வாழ்க்கை வரலாற்றில் பல புதிய உயிரினங்களுக்குப் பெயரிட்டிருந்தாலும், தாமே நேரில் கண்டறிந்து விவரித்த முதல் டைனோசர் இனம் இதுதான் என்றும் பால் பாரெட் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

ஆராய்ச்சியாளர்களின் கணிப்பின்படி, 'முசாங்கோ மாதுசடோனேனிசிஸ்' டைனோசர் இடுப்பு வரை சுமார் 1.5 மீட்டர் (5 அடி) உயரமும், சுமார் 390 கிலோகிராம் (860 பவுண்டுகள்) எடையும் கொண்டதாக இருந்திருக்கலாம். இது 'சாரோபோடோமோர்ஃப்' (Sauropodomorph) என்ற டைனோசர் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த இனத்திலிருந்துதான் பின்னாட்களில் நீண்ட கழுத்தைக் கொண்ட மாபெரும் ‘சாரோபாட்’ டைனோசர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தன. இவை பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய நில வாழ் உயிரினங்களில் ஒன்றாகும்.

ஆராய்ச்சிப் பயணத்தின் போது விஞ்ஞானிகளின் மிதக்கும் ஆய்வகமாகச் செயல்பட்ட 'முசன்க்வா' என்ற படகின் பெயரையும், அருகில் உள்ள சன்யாதி நதியின் பெயரையும் இணைத்து இந்த டைனோசருக்குப் பெயரிடப்பட்டுள்ளது. பரிணாமப் பகுப்பாய்வுகளின்படி, இந்த இனம் முன்னதாக அர்ஜென்டினா மற்றும் தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இதன் மூலம், ஆரம்பகால டைனோசர்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்த நிலப்பரப்புகள் வழியாகப் பரவ முடிந்ததை இது காட்டுகிறது.

ஆப்ரிக்காவில் இன்னும் ஏராளமான தொல்லியல் அதிசயங்கள் ஆய்வு செய்யப்படாமல் இருப்பதை இந்தக் கண்டுபிடிப்பு சுட்டிக்காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, ஆப்பிரிக்காவில் மிகக் குறைவான நபர்களே புதை படிவங்களைத் தேடி அகழ்வாராய்ச்சி செய்துள்ளனர்; அதனால்தான் அங்குள்ள டைனோசர் புதைபடிவங்கள் பற்றிய தகவல்கள் குறைவாகவே வெளிவந்துள்ளன என்று ஆய்வின் இணை ஆசிரியரான டாக்டர் கிம்பர்லி சாப்பல் தெரிவித்துள்ளார். மேலும், 'முசாங்கோ மாதுசடோனேனிசிஸ்' கண்டுபிடிப்பானது, பிராந்தியத்தில் இன்னும் பல தொல்லுயிரியல் கண்டுபிடிப்பு நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளை உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.