வடக்கின் கைவினைத் திறமைகள் ஒரே இடத்தில்! - யாழ்ப்பாணத்தில் கண்காட்சி ஆரம்பம்

வடக்கின் கைவினைத் திறமைகள் ஒரே இடத்தில்! - யாழ்ப்பாணத்தில் கண்காட்சி ஆரம்பம்

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம், புடவைக் கைத்தொழில் திணைக்களம் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை ஆகியன இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்து நடத்தும் கைவினைஞர்களுக்கான போட்டியும் கண்காட்சியும் இன்றைய தினம் (16) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. ச. கிருஷ்னேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கை. சிவகரன், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி என். எஸ். ஆர். சிவரூபன், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி செ. வனஜா, வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி சோபிகா றோய் றொபின்சன் உள்ளிட்ட தலைமைப் பீட மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

பாரம்பரியமும் படைப்பாற்றலும் சங்கமிக்கும் கண்காட்சி

வடமாகாணத்தைச் சேர்ந்த கைப்பணியாளர்கள் மற்றும் நெசவாளர்களினால் உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான கைத்தறி நெசவு உற்பத்திகள், களிமண் உற்பத்திகள், தும்பு, ஓலை மற்றும் புல் சார்ந்த உற்பத்திகள், பிரம்பு மற்றும் மூங்கில் சார்ந்த உற்பத்திகள், உலோகக் கைப்பணிப் பொருட்கள், ஆபரணங்கள், சங்கீத உபகரணங்கள், துணிகளினாலான கைப்பணிப் பொருட்கள், சிரட்டை மற்றும் சிப்பியிலான கைப்பணிப் பொருட்கள், பற்றிக்ரேந்தை உற்பத்திகள், மர உற்பத்திப் பொருட்கள், தோல் பொருட்கள், கல்லாலான கைப்பணிப் பொருட்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள், தென்னை மற்றும் பனை சார்ந்த உற்பத்திகள், நானாவித கைப்பணிப் பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் எனப் பல்வேறு சிறந்த படைப்புகள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றுடன், காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு கைவினைப் பொருட்களை பொதுமக்கள் நேரடியாகப் பார்வையிட்டு கொள்வனவு செய்யும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி நாளைய தினமும் (17) தொடர்ந்து நடைபெறவுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் கண்காட்சிக்கு வருகை தந்து, எமது வடமாகாண கைவினைஞர்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் பார்வையிட்டு அவர்களை ஊக்குவிப்பதுடன், தங்களுக்குத் தேவையான பாரம்பரிய மற்றும் கைவினைப் பொருட்களையும் கொள்வனவு செய்து பயன்பெறுமாறு வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.