மல்லிகைச் செடியில் மகசூல் வேட்டை... கணக்கில்லாமல் 'பூ' பறிக்க மேஜிக் லிக்யூடு!
தோட்ட நிபுணர்களின் கருத்துப்படி, மல்லிகைச் செடிகளுக்கு அதிக வெயிலும், சரியான அளவு நீர்ப்பாசனமும் கிடைப்பது அவசியம். காலையில் மட்டும் தண்ணீர் ஊற்றுவது நல்லது.
வீட்டுத் தோட்டம் மற்றும் செடிவளர்ப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு மல்லிகைச்செடியை ஆரோக்கியமாகவும், பூக்களால் நிரம்பியதாகவும் வளர்ப்பது எப்போதும் ஒரு சவாலாகவே இருக்கும். குறிப்பாக சில நேரங்களில் செடி நன்றாக வளர்ந்தாலும், மொட்டுகள் குறைவாக உருவாகுதல், பூக்கள் விரைவில் உதிர்தல், இலைகள் மஞ்சளாக மாறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இத்தகைய சூழலில், செலவில்லாத மற்றும் இயற்கையான ஒரு எளிய தீர்வாக எலுமிச்சைத் தோல் கலவை தற்போது தோட்ட ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சமையலறையில் சாதாரணமாக தூக்கி எறியப்படும் எலுமிச்சைத் தோலில் நிறைந்துள்ள சிட்ரிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் இயற்கை ஊட்டச்சத்துக்கள் மல்லிகைச் செடிகளின் வளர்ச்சியை ஊக்குவித்து, அதிக மொட்டுகள் உருவாகவும், பூக்கள் செழித்து மலரவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த இயற்கை கலவை செடிகளை தாக்கும் எறும்புகள், சிறிய பூச்சிகள் மற்றும் பூஞ்சை தொல்லைகளையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த கலவையை தயாரிக்க முதலில் ஐந்து எலுமிச்சைப் பழங்களின் தோல்களை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பாட்டிலில் போட வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் நிரப்பி இறுக்கமாக மூடி, நேரடி வெயில் படாத நிழலான இடத்தில் மூன்று நாட்கள் வைத்திருக்க வேண்டும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பாட்டிலை நன்றாகக் குலுக்குவது அவசியம். இதனால் எலுமிச்சைத் தோலிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் நன்கு கலக்கும். மூன்று நாட்களுக்குப் பிறகு திரவத்தை வடிகட்டி, தோல்களை நீக்கிவிட வேண்டும். பின்னர் அந்த திரவத்தை ஒரு பங்கு எடுத்து, அதனுடன் இரண்டு பங்கு தண்ணீர் கலந்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம்.
இந்த கரைசலை மல்லிகைச் செடியின் இலைகள், கிளைகள் மற்றும் வேர் சுற்றியுள்ள மண்ணில் லேசாக தெளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இந்த முறையைப் பின்பற்றினால், செடியில் புதிய கிளைகள் வேகமாக வளர்ந்து, அதிக அளவில் மொட்டுகள் தோன்றும். மேலும் பூக்களின் மணமும் நீண்ட நேரம் நீடிக்கும் என்று தோட்ட ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கோடை காலங்களில் செடிகள் வறட்சியால் பாதிக்கப்படாமல் இருக்க, இந்த கலவை ஒரு இயற்கை ஈரப்பத பாதுகாப்பாகவும் செயல்படுகிறது. மண்ணின் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்தி, வேர் பகுதியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இதனுடன், எறும்புகள் மற்றும் சிறிய பூச்சிகளின் தொல்லையையும் இந்த எலுமிச்சைத் தோல் கலவை குறைக்கிறது. எறும்புகள் அதிகமாக நடமாடும் இடங்களில் இந்த கரைசலை நேரடியாக தெளித்தால், அவை அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லும். ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் செடிகளை பாதுகாக்க விரும்புவோருக்கு இது மிகவும் பாதுகாப்பான வழியாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கலவையுடன் சிறிதளவு வேப்பெண்ணெய் கலந்து பயன்படுத்தினால், இலைகளைத் தாக்கும் சிறிய பூச்சிகளையும் எளிதில் கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
தோட்ட நிபுணர்களின் கருத்துப்படி, மல்லிகைச் செடிகளுக்கு அதிக வெயிலும், சரியான அளவு நீர்ப்பாசனமும் கிடைப்பது அவசியம். காலையில் மட்டும் தண்ணீர் ஊற்றுவது நல்லது. உலர்ந்த பூக்கள் மற்றும் பழைய கிளைகளை அடிக்கடி வெட்டி அகற்றினால், புதிய கிளைகள் வேகமாக உருவாகும். இதனுடன் இந்த எலுமிச்சைத் தோல் கலவையை தொடர்ந்து பயன்படுத்தினால், மல்லிகைச் செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்து, நீண்ட நாட்கள் நிறைந்த பூக்களுடன் கண்ணையும் மனதையும் கவரும் என்று தோட்ட ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.