வீட்டு பக்கத்தில் அதிக மரங்கள்: கரண்ட் பில் 15% குறையும்; விஞ்ஞானிகள் கண்டுபிடித்த செம்ம ட்ரிக்!
வெறும் மரங்களின் எண்ணிக்கையை மட்டும் அதிகரிப்பது நகர்ப்புற வெப்பத்தை குறைக்க உதவாது; மரங்களை நடும் இடமும் அதன் வடிவமைப்புமே முக்கியம் என சமீபத்திய அறிவியல் ஆய்வு கூறுகிறது.
"வெயில் கொளுத்துதா... நாலு மரத்தை நடுங்கப்பா" இதான் இப்போதைக்கு நம்ம எல்லாருடைய மைண்ட் வாய்ஸ். குளோபல் வார்மிங், சிட்டி வெயில்னு நொந்து போயிருக்க நமக்கு, மரங்கள் தான் ஒரே தீர்வுன்னு நினைச்சிட்டு இருக்கோம். ஆனா, மரங்களை சும்மா எண்ணிக்கைக்கு நட்டா மட்டும் போதாதுங்க, அதை எந்த வடிவத்துல, எந்த இடத்துல நடுறோம்ங்கிறது தான் முக்கியம் அப்படின்னு அதிரடியான உண்மையை உடைச்சிருக்கு ஒரு புதிய சர்வதேச அறிவியல் ஆய்வு. 'Scientific Culture' என்ற இதழில் வெளியான இந்த ரிப்போர்ட்டுக்காக, விஞ்ஞானிகள் கடந்த 10 வருஷத்துல உலகெங்கும் நடத்தப்பட்ட 49 முக்கிய ஆராய்ச்சிகளை அலசி ஆராய்ஞ்சிருக்காங்க. அதுல கிடைச்ச சுவாரசியமான சீக்ரெட்ஸ்;
நாம வழக்கமா அங்கொன்னும் இங்கொன்றுமா மரங்களை நடுவோம். ஆனா, இந்த ரிப்போர்ட் படி, மரங்களைத் தனித்தனியா நடுவதை விட, பூங்காக்கள் மாதிரி ஒரே இடத்துல கூட்டமாக அடர்த்தியா நடும்போது தான் பலன் பல மடங்கு அதிகமாம். அப்படி நடும் போது, மரங்களின் இலைகள் ஒண்ணா சேர்ந்து, இலைகளில் இருந்து வர்ற நீராவிப்போக்கு மூலமா அந்தப் பகுதியோட காற்றோட வெப்பநிலையை அப்படியே 5°C வரை குறைக்குமாம். கேட்கவே சில்லுனு இருக்குல்ல. அடுத்ததா, சாலைகள் மற்றும் நடைபாதைகளோட ஓரங்கள்ல வரிசையாக (Row-based) மரங்கள் நடும்போது, அது தார்ச்சாலைகளும் கான்கிரீட் தளங்களும் பகல்ல உறிஞ்சுற வெப்பத்தை அப்படியே தடுத்து நிறுத்துது. சாலையோட சூட்டை 2°C முதல் 4°C வரை குறைக்குமாம். தனி மரத்தால தேறவே தேறாதான்னு கேட்டா, அதுக்கும் ஒரு வழி இருக்கு. உங்க வீட்டுல இருந்து 5 முதல் 10 மீட்டர் தூரத்துல ஒரு மரத்தை நட்டி வளர்த்தீங்கன்னா, அது வீட்டுக்குள்ள வர்ற வெப்பத்தைக் குறைச்சு, உங்க வீட்டு ஏசி (AC) கரண்ட் பில்லை 10% முதல் 15% வரை மிச்சப்படுத்துமாம்.
சிட்டில மரங்களை வெட்டிட்டு ரோடு, கான்கிரீட் பில்டிங்னு கட்டுறதால, அவை பகல் முழுக்க வெயிலை உறிஞ்சி வச்சுட்டு, நைட்டுல அந்த வெப்பத்தை வெளியிடுது. இதனால கிராமங்களை விட சிட்டிக்குள்ள ராத்திரியில பயங்கர அனல் அடிக்கும். இதைத்தான் அறிவியல் மொழியில 'அர்பன் ஹீட் ஐலண்ட்' (Urban Heat Island Effect) அப்படின்னு சொல்றாங்க. இதை உடைக்கத் தான் இப்போ இந்த 'ரூட் மேப்' தேவைப்படுது. இந்த ரிப்போர்ட்ல ஒரு குட்டி ட்விஸ்ட்டும் இருக்கு. இந்த ஆராய்ச்சிக்கான டேட்டால 38% சீனா, ஜப்பான், கொரியா போன்ற கிழக்கு ஆசிய நாடுகள்ல இருந்து தான் எடுக்கப்பட்டிருக்கு. ஆனா, வெயில் கொளுத்துற நம்ம இந்தியா (தெற்காசியா), ஆப்ரிக்க நாடுகள்ல இருந்து பெரியளவுல டேட்டா இல்ல. அதனால, மத்த நாட்டை பார்த்து அப்படியே காப்பி அடிக்காம, நம்ம ஊர் காலநிலை, மழைப்பொழிவுக்கு ஏத்த மாதிரி, நம்ம மண்ணோட பாரம்பரிய மரங்களை எங்கெங்கே எப்படி நடலாம்னு நகரத் திட்டமிடுபவர்கள் (Urban Planners) பிளான் பண்ணனும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. இனிமேல் மரக்கன்று நடும் போது மைண்ட்ல வச்சுக்க வேண்டிய ஒரே விஷயம்: வெறும் எண்ணிக்கையை மட்டும் பார்க்காம, சரியான இடத்துல உத்திப்பூர்வமா நடுவோம்; வெயிலை விரட்டுவோம்.