சாதாரண தர பரீட்சை : 9 பாடங்களிலும் "ஏ" சித்தி பெற்ற மாணவர்கள்
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின்படி அனைத்துப் பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்ற பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
அதன்படி, பரீட்சைக்கு தோற்றிய 451,463 பரீட்சார்த்திகளில் 11,790 மாணவர்கள் 9 பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரத்தில் கல்வி கற்க தகுதி
அவர் மேலும் தெரிவிக்கையில், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதுடன் 11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்றுள்ளனர்.
இவர்களில் 11,651 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் என்பதுடன், 139 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆவர். இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 7,419 பேர் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர்.
அதேபோன்று, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் சித்தியடைந்தவர்களின் வீதம் அதிகரித்துள்ளது.
இதன்படி, இம்முறை விஞ்ஞானப் பாடத்தில் 70.1 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், கடந்த வருடம் அது 69.07சதவீதமாக காணப்பட்டது.
மேலும், இம்முறை கணிதப் பாடத்தில் 72.03 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், கடந்த வருடம் அது 71.06 சதவீதமாகக் காணப்பட்டது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.