பாக்யராஜின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும்.
பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது (73). தமிழ் சினிமாவில் இருபெரும் இயக்குநர்களான பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் ஆகியோர் சில தினங்களிலே அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பாக்யராஜ் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜ் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மறைந்த இயக்குநர் பாக்யராஜ் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.