போதை இல்லா தமிழகம்: சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்கிறார் முதலமைச்சர் விஜய்

போதை இல்லா தமிழகம்: சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்கிறார் முதலமைச்சர் விஜய்

கல்லூரி மாணவ-மாணவியர் ஏராளமானோர் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
 

போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கவும், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

உறுதிமொழி

அந்த வகையில் போதைப் பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி வருகிறார்.

தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்.

இதை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சென்னை மாநிலக் கல்லூரியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கல்லூரி மாணவ-மாணவியர் ஏராளமானோர் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யுடன் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் சிறப்பாக பணியாற்றிய மதுவிலக்கு போலீசாருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறார்.

சென்னையில் நிகழ்ச்சி நடைபெறுவதை போன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாரத்தான் ஓட்டம்

கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி நடைபெற்ற சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மெரீனாவில் தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் விஜய் அதில் பொதுமக்களுடன் இணைந்து ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது.