இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறை கைதி வீட்டிற்கு உயிருடன் வந்ததால் பரபரப்பு!
கல்கமுவ, கொஹோபங்குளம் கிராமத்தில் காவல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், தனக்காக இறுதிச் சடங்குகள் தயாராகிக் கொண்டிருந்த வீட்டிற்கே உயிருடன் திரும்பி வந்த விசித்திரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வாரியபொல சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொஹோபங்குளத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவர் சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாக நன்னேரியா காவல்துறையினர் அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிர்ச்சிச் செய்தியைக் கேட்ட உறவினர்களும் கிராம மக்களும் உடனடியாக ஒன்றிணைந்து இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.
திகைப்பில் உறவினர்கள்
கிராமம் முழுவதும் இறுதி அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டு, பந்தல்கள் அமைக்கப்பட்டு, தகனக் கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளன.

எனினும், இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட கீர்த்திசேன சிறையில் இருந்து இன்றையதினம் விடுவிக்கப்பட்டு, திடீரென உயிருடன் வீட்டிற்குள் நடந்து வந்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.
தனக்காகவே நடத்தப்பட்டு வந்த இறுதிச் சடங்கு வீட்டிற்குள் அவர் உயிருடன் நுழைந்ததைக் கண்டு உறவினர்களும் ஊர் மக்களும் பேரதிர்ச்சியும் பெரும் குழப்பமும் அடைந்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.