15 நிமிஷ சார்ஜ், 24 மணி நேர பேக்கப்; பிரீமியம் அம்சங்களுடன் மோட்டோ வாட்ச் அல்ட்ரா அறிமுகம்

15 நிமிஷ சார்ஜ், 24 மணி நேர பேக்கப்; பிரீமியம் அம்சங்களுடன் மோட்டோ வாட்ச் அல்ட்ரா அறிமுகம்

கூகுள் 'வியர் ஓஎஸ்' இயங்குதளம், சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய 'மோட்டோ வாட்ச் அல்ட்ரா' ஸ்மார்ட்வாட்சை மோட்டோரோலா அறிமுகப்படுத்தியுள்ளது.

மோட்டோரோலா நிறுவனம் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய தனது புதிய 'மோட்டோ வாட்ச் அல்ட்ரா' (Moto Watch Ultra) ஸ்மார்ட்வாட்சை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்களுக்குப் போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சாதனம், விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைன் மற்றும் திரையைப் பொறுத்தவரை, இதில் 1.5 இன்ச் அளவிலான curved போ லெட்(pOLED) டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2700 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டதால், வெளிச்சமான இடங்களிலும் திரையைத் தெளிவாகப் பார்க்க முடியும். மேலும், இதில் 'ஆல்வேஸ்-ஆன்' (Always-on) வசதியும், திரையின் பாதுகாப்பிற்காக கொரில்லா கிளாஸ் 3 தொழல்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 12.1 மிமீ தடிமனும், 51 கிராம் எடையும் கொண்ட இந்த வாட்ச், வலுவான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயல்திறனுக்காக இதில் ஸ்னாப்டிராகன் W5+ Gen 1 சிப்செட் மற்றும் கூகுளின் 'வியர் ஓஎஸ் 6' (Wear OS 6) இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக கூகுள் மேப்ஸ், கூகுள் பே, ஜெமினி, யூடியூப் மியூசிக் போன்ற செயலிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன், இந்த வாட்சிற்கு இரண்டு பெரிய ஓஎஸ் அப்டேட்களும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு வசதிக்காக இதில் இ-சிம்(eSIM) சப்போர்ட், எல்.டி.இ(LTE) மற்றும் டூயல்-பேண்ட் ஜிபிஎஸ் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதில் உள்ள சக்திவாய்ந்த பேட்டரி, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 2 நாட்கள் வரை உழைக்கும். மேலும், இதன் பாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 24 மணி நேரத்திற்குப் பயன்படுத்த இயலும். தூசி மற்றும் நீரினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க IP68 மற்றும் 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழ்களையும் இது பெற்றுள்ளது.

உடல்நலனைக் கண்காணிக்க இதயத் துடிப்பு, ரத்த ஆக்சிஜன் அளவு, தூக்கத்தின் தரம் ஆகியவற்றை அளவிடும் சென்சார்களுடன், உடற்பயிற்சி செய்ய உதவும் 'ரன்னிங் கோச்' அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது. சிலிகான் மற்றும் லெதர் ஸ்ட்ராப் விருப்பங்களில், பான்டோன் நிறப் பதிப்புகளில் இந்த வாட்ச் கிடைக்கிறது. ஐரோப்பிய சந்தையில் இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.47,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிய நாடுகளிலும் விரைவில் இது விற்பனைக்கு வரவுள்ளது.