பைத்தியம் போல கதை சொல்லாமல் தெரிந்ததை பேசுங்கள்.. சபையில் அர்ச்சுனாவுக்கு விஜித ஹேரத் பதிலடி
நாடாளுமன்றத்தில் தெரிந்ததை மட்டும் பேசுங்கள். தேவையற்ற விடயங்களை தவறாகப் பேசவேண்டாம் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை வெளிவிவகார அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார்.
நேற்று (22) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தின்போது அவர் இதனை தெரிவித்தார்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் ஜுலபுன் அமோர்ன்விவாட் அழைப்பின் பேரில் செப்டெம்பர் 14 முதல் 16ஆம் திகதி வரை மேற்கொண்ட தாய்லாந்திற்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்திருந்தார்.
உலகமே சிரிக்கிறது
இந்நிலையில் இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பேசியிருந்ததாவது,
அதில்“வெளிநாடொன்றின் துணை பிரதமர், வணிகத்துறை அமைச்சர் ஒருவர் வந்தபோது நீங்கள் யாரும் செல்லவில்லை. லக்ஸ்மன் கதிர்காமரைப் போல் சிறந்த வெளிவிவகார அமைச்சர் இருந்த நாடு இது. நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

அவர்களைப் போல் நல்லவர்கள் வாழ்ந்து நாட்டைக் காப்பாற்றிய நாட்டில் இப்போது இன்டர்நெஷனல் எனக் கூறத் தெரியாமல் இருக்கிறார்கள். அனைவரும் சிரிக்கிறார்கள். உலகமே நம்மைப் பார்த்து சிரிக்கிறது. எனவே பெரிய இருக்கைகளில் அமரும்போது அதற்கேற்றவாறு நடந்துகொள்ள முயற்சியுங்கள்.
கதிர்காமரைப் போல் பெரியவர்கள் அமர்ந்த இருக்கையில் இருந்துகொண்டு செய்யும் தேவையற்ற வேலைகள் செய்ய வேண்டாம். நாட்டின் பிரதமர் ஒருவர் வந்தபோது எதுவித பாதுகாப்பும் வழங்காமல் முறையற்ற ஒரு வேலை செய்தனர் ” என கூறியிருந்தார்.
இதற்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பின்வருமாறு பதிலளித்திருந்தார். “இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையில் நீண்ட கால உறவு உள்ளது. தாய்லாந்து அரசின் அழைப்பின்பேரில் நான் அங்கு சென்றேன். அதன்மூலம் தாய்லாந்துக்கும் இலங்கைக்குமான உறவு இன்னும் பலப்படுத்தப்பட்டது.
தெரிந்ததை மட்டும் பேசுங்கள்
அதேபோல் தாய்லாந்து நாட்டினரின் இந்த வருகை முதற்தடவை அல்ல. தெரிந்ததை மட்டும் பேசுங்கள். தேவையற்ற விடயங்களை தவறாகப் பேசவேண்டாம். டிட்வா புயலுக்கு முன்பு இலங்கைக்கு வந்தார்கள்.

பின் கண்டிக்குச் சென்றார்கள். எனவே உங்கள் முட்டாள்தனத்தை சபையில் காண்பிக்க வேண்டாம்” என அர்ச்சுனாவுக்கு பதிலளித்திருந்தார்.