நாட்டின் பல பகுதிகளில் கொட்டித் தீர்க்கப்போகும் பலத்த மழை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (6) அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்கள்
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதேவேளை மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.