அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு - அரச தரப்பு வெளியிட்ட அறிவிப்பு
எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என பரப்பப்படும் செய்திகளை அரசாங்கம் முற்றுமுழுதாக மறுத்துள்ளது.
தரமற்ற சில கொள்கலன்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தைக்கு அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடையின்றி தொடர்வதாகவும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
துறைமுக நடவடிக்கைகள் வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும், உணவுப் பொருட்களை சந்தைக்கு விடுவிப்பதில் எந்தவித தடையும் இல்லை எனவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு
கடந்த சில நாட்களாக சமூகத்தில் இத்தகைய போலிப் பிரசாரத்தைப் பரப்புவதற்கு திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் முக்கிய துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கையும், கையாளப்படும் கொள்கலன்களின் கொள்ளளவும் இயல்பு நிலையை விட அதிகரித்துள்ளதாக துறைமுக நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளாக்கினார்.
கொள்கலன் தேக்கம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று ஒரு கதையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பொருட்களின் சில்லறை விலை
எனினும், அவ்வாறு எந்தவொரு கொள்கலன் தேக்கமும் இல்லை. துறைமுகங்களுக்கு அதிகமான கப்பல்களும் கொள்கலன்களும் வந்து கொண்டிருக்கின்றன.

இதுவரை எந்த அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் உள்ளிட்ட முக்கிய நுகர்வுப் பொருட்கள் தொடர்ந்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் சில பொருட்களின் சில்லறை விலைகளைக் குறைந்த மட்டத்தில் பேண முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.