மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் துறையினருக்கும் வாய்ப்பு!
தனியார் துறையினருக்கும் மெட்ரோ பஸ் சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதேஇதனைக் குறிப்பிட்ட அமைச்சர் ஒரு வருட காலப்பகுதிக்குள் இந்த வாய்ப்பு வழங்கப்படும் என சுட்டிக்காட்டினார்.
மெட்ரோ பஸ்களுக்குச் சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகப் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மெட்ரோ பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பெரும்பான்மையான தனியார் பஸ்கள் அதற்கு எவ்வித இடையூறும் செய்யவில்லை என்றும், மிகச் சில பஸ்களிலேயே இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.
இதனை ஒட்டுமொத்தத் தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினையாகக் கருதவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், மெட்ரோ பஸ் சேவையுடன் இணக்கமாகச் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
"மெட்ரோ பஸ்களை விபத்துக்குள்ளாக்குபவர்கள் பொதுச் சொத்துக்களுக்கே சேதம் விளைவிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் சாரதிகள் அல்லது உரிமையாளர்கள் கடுமையான வழக்குகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என நினைக்கிறேன். ஏனெனில், இலங்கை மக்களின் பொதுச் சொத்துக்களுக்கே இவர்கள் சேதம் விளைவிக்கின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட மெட்ரோ பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. அவற்றிற்குத் தனியார் பஸ்களில் பெரும்பாலானவற்றினால் எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லை. மிகச் சில பஸ்களே இவ்வாறான விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளன.
அதனால் இது ஒட்டுமொத்தத் தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினையல்ல. எங்குமே ஒரு சிலர் இப்படி இருப்பார்கள்தானே? எனவே, வீணாகப் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்துவிட்டுப் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல், நாடு ஏற்றுக்கொண்ட இந்த முறைமைக்கு அமையச் செயற்படுங்கள், அதற்கு ஏற்ப மாறிக் கொள்ளுங்கள்.
ஏனெனில், நாம் எப்படியும் ஒரு வருடத்திற்குள் மெட்ரோ பஸ் சேவையைத் தனியார் துறைக்குத் திறந்துவிடுவோம்" எனக் குறிப்பிட்டார்.