படு*கொ*லை செய்யப்பட்ட எங்கள் ஊடக நண்பர்களுக்கு நீதி வேண்டும்: ஐபிசி தமிழின் பகிரங்க கோரிக்கை
இன்று ஒக்டோபர் 19. படு*கொ*லை செய்யப்பட்ட ஈழத்தமிழ் ஊடகவியலாளர்களின் நினைவு நாள்.
ஈழத்தமிழர்களின் வரலாற்றில் தமிழ் ஊடகத்துறை மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது. விடுதலைக்காகப் பயணித்த விடுதலையாளர்களைப் போலவே, ஈழத்தமிழ் ஊடகத்துறையும் 35க்கும் மேற்பட்ட தனது ஊடகப்பணியாளர்களை இந்த மண்ணில் இழந்திருக்கிறது.
இந்த மண்ணில் நடந்த அநீதிகளையும் அநியாயங்களையும் செய்திகளாக்கினார்கள். அந்த ஒரே காரணத்துக்காகவே அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அரச இயந்திரம், அரசின் துணை இராணுவக் குழுக்கள், "இனம் தெரியாத நபர்கள்" என்று சொல்லப்பட்டவர்கள் என, ஒரு கொடூரமான காலகட்டத்தில் எங்கள் ஊடகவியலாளர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. ஒரு இனத்தின் செய்திகளைச் சுமந்து, உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவே அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
வீதிகளிலும் வீடுகளிலும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றுவரை அவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை. அது கானல் நீராகவே இருக்கிறது.
இந்த மண்ணில் மிகப்பெரிய விலையைக் கொடுத்த துறைகளில் தமிழ் ஊடகப் பரப்பும் ஒன்று என்பதை, கனத்த மனதோடு இந்த நேரத்தில் பதிவு செய்கிறோம்.
இந்தத் தளத்தில் இன்றுவரை பயணிக்கும் ஒரு ஊடகமாக, கொல்லப்பட்ட எங்கள் சக ஊடகவியலாளர்களின் நீதிக்காக ஒரு பகிரங்கக் கோரிக்கையை முன்வைக்கிறோம் படுகொலை செய்யப்பட்ட எங்கள் ஊடக நண்பர்களை அவர்களின் படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தாருங்கள்.
இந்த கொலைகளை செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, இனிமேல் ஊடகத்துறை மீது யாருமே கை வைக்கக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.
காலங்காலமாகப் பேரினவாதத் தரப்புகளும் அடக்குமுறையாளர்களும் சீண்டிப் பார்க்கின்ற, பலி கொள்கின்ற ஒரு துறையாகவே ஊடகவியலாளர்கள் இருந்து வருகிறார்கள். ஊடகவியலாளர்கள் இந்த மண்ணுக்காக உழைப்பவர்கள். நேரம் காலம் பார்க்காமல் இந்த மண்ணுக்காகப் பணியாற்றுபவர்கள்.
அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். ஊடக அடக்குமுறைகள் தடுக்கப்பட வேண்டும். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
மக்களுக்கு உண்மையைச் சொன்னதற்காக அநியாயமாகக் கொல்லப்பட்ட அத்தனை ஊடக நண்பர்களுக்கு எங்கள் அஞ்சலிகள்.