சிவப்பு எச்சரிக்கை - தீவிரமடையும் ‘அர்னாப்’ புயல் - மிகுந்த அவதானம்
வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல், மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாகவும் அதைத் தொடர்ந்து மிகத் தீவிரப் புயலாகவும் மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (26.10.2026) காலை 5.30 மணி நிலவரப்படி, வங்கக்கடலின் மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்குப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற்றது.
இந்தப் புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை தீவிர புயலாகவும், நாளை (27) மிகத் தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்து வருவதால், பல நாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (26) காலை 9.30 க்கு வெளியிடப்பட்ட இந்த வானிலை அறிவிப்பு அடுத்த 12 மணி நேரத்துக்கு செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், பலத்த இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.
மேலும், கடல் அலைகள் 3 முதல் 4 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி நடவடிக்கை
இதனால், வட அட்சரேகை 10° முதல் 20° வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 80° முதல் 95° வரையிலும் அமைந்துள்ள கடல் பகுதிகளுக்குள் மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்படையினர் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே குறித்த கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.