இந்தியாவிற்கு கடத்தவிருந்த கிலோ கணக்கான தங்கத்தை மீட்டது சிறிலங்கா கடற்படை
சிறிலங்கா கடற்படையினர், மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட இரு வேறு நடவடிக்கைகளின் போது, தென்னிந்தியாவுக்குக் கடத்தப்படவிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் நான்கு கிலோகிராமிற்கும் அதிகமான தங்கத்தைக் கைப்பற்றியதுடன், நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கடற்படையின் தகவல்படி, செவ்வாய்க்கிழமை (17) தலைமன்னார் - பேசாலை மற்றும் புத்தளம் - உச்சமுனை ஆகிய கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் மூலம், சுமார் 4.435 கிலோகிராம் தங்கம் மற்றும் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டன.
சந்தேகத்திற்கிடமான படகு
முதல் நடவடிக்கையின் போது, வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவைச் சேர்ந்த கடற்படையினர், தலைமன்னார் - பேசாலை கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றைத் தடுத்து நிறுத்தினர்.
அந்தப் படகைச் சோதனையிட்டபோது, மணல் நிரப்பப்பட்ட சாக்கு மூட்டைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1.410 கிலோகிராம் தங்கம் கண்டெடுக்கப்பட்டது.
இதன்போது, பேசாலையைச் சேர்ந்த 25 மற்றும் 28 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் உள்ள சுங்கத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
மற்றொரு நடவடிக்கை
மற்றொரு நடவடிக்கையாக, செவ்வாய்க்கிழமை இரவு புத்தளம் - உச்சமுனை கடல் பகுதியில், வடமேற்கு கடற்படை கட்டளைப் பிரிவினர் சந்தேகத்திற்கிடமான மற்றொரு படகை இடைமறித்தனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், எரிபொருள் கொள்கலன் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3.25 கிலோகிராம் தங்கம் கண்டெடுக்கப்பட்டது.
இதனுடன் தொடர்புடைய, கற்பிட்டியைச் சேர்ந்த 40 மற்றும் 50 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள், தங்கம் மற்றும் படகு ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்கவில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட இந்தத் தங்கம், கடல் வழியாகத் தென்னிந்தியாவுக்குக் கடத்தப்படவிருந்ததாகச் சந்தேகிக்கப்படுவதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.