பதவி முக்கியமல்ல - ஏன் ஓரக்கண்ணால் பாக்கின்றார்கள்! ரிஷாட் ஆதங்கம்
நாங்கள் ஒரு நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றோம் ஆனால் ஏன் ஓரக்கண்ணால் பாக்கின்றார்கள் என்று தெரியவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னை பொறுத்தமட்டில் பதவி பட்டம் முக்கியமல்ல, அரசு நல்லது செய்கின்ற பொழுது நாங்கள் உதவி செய்வோம்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் 21 மாவட்டங்களில் பொதுஜன பெரமுன அணியினர் தான் அதிகபட்ச வாக்கினை பெற்று இருந்தார்கள்.
ஒரே ஒரு மாவட்டத்தில் தான் சஜித் பிரேமதாசாவினை சார்ந்த அணியினருக்கு அதிகப்படியான வாக்கு கிடைத்துள்ளது.
எந்த ஒரு தேர்தலிலும் நான்படாத கஸ்ரத்தினை இந்த அரசாங்கம் எனக்கு ஏற்படுத்தி இருந்தது.
பாதுகாப்பு அமைச்சிற்கும் ஜனாதிபதிக்கும் இருக்கின்ற அதிகாரத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எனது சகோதரனை கூட சிறையில் வைத்துள்ளார்கள்.
சிறுபான்மை தலைவரான எனக்கு கொடுத்த மாதிரியான கஸ்ரத்தினை இந்த நாட்டில் எந்த ஒரு சிறுபான்மை தலைவருக்கும் கொடுத்திருக்கமாட்டார்கள்.
மக்கள் எங்களை தேர்வு செய்துள்ளார்கள். அமைச்சர் பதவி இல்லை என்பதால் எங்கள் பணி ஓயப்போவதில்லை எங்கள் பணி தொடரும்.
உலகம் எல்லாம் அங்கிகரித்த சில விடயங்களை இந்த நாட்டில் மட்டும் அங்கிகரிக்க மாட்டோம் என்று சொல்வது ஒரு சமூதாயத்தினை, ஒரு மதத்தினை இழிவு படுத்துவதற்கான செயலே ஆகும்.
இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதியுடன், பிரதமருடன் பேசத்தயாராக இருக்கின்றோம். வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான நிதித்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு அரசாங்கம் ஆரம்பித்து வைத்த வேலையினை முடித்து வைக்கவேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது.
அநியாயங்களை செய்கின்ற பொழு நாங்கள் நிச்சயமாக அதற்கு எதிராக குரல் கொடுப்போம் செயற்படுவோம்.
நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம், அடிப்படை மனித உரிமை வழக்கு தாக்கல் செய்துள்ளோம், நியாயம் கிடைக்கும் என்று நம்புகின்றாம்.
நியாயம் கிடைக்கவில்லை என்றால் ஜெனீவாவிற்காவது சென்று சர்வதேசம் ஊடாக அநியாயத்திற்கு எதிராக எங்களால் முடிந்ததை செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.