ஆன்லைன் வகுப்புகளால் மன உளைச்சல்- பதட்டத்தால் தவிக்கும் மாணவர்கள்

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் இடையே மன ரீதியாக பல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக 10 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன் முதலில் கொரோனா தோன்றியது.

 


அதன்பிறகு மார்ச் மாதம் முதல் உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவ தொடங்கியது. இதனால் நோயை கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகளும் பொது முடக்கத்தை அமல்படுத்தியது.

பள்ளி -கல்லூரிகள் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன.

பெரும்பாலான நாடுகளில் 10 மாதங்களுக்கும் மேலாக இன்றுவரை ஆன்லைன் மூலமே மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். இவ்வாறு ஆன்லைன் மூலம் கல்வி கற்பது மாணவர்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா, கனடா, ஸ்பெயின், பிரேசில், இந்தோனேஷியா, ஸ்வீடன், லெபனான், சிலி, நைஜீரியா ஆகிய 10 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதில் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் இடையே மன ரீதியாக பல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஆன்லைனில் கல்வி கற்கும் மாணவர்கள் அதிக உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் பதட்டம் உடையவர்களாகவும் காணப்படுகிறார்கள். விரக்தி, மன அழுத்தம் போன்றவற்றாலும் அவர்கள் தவிக்கிறார்கள்.

விளையாடுவதற்கு நேரமின்மை, படிப்பை தவிர மற்ற பணிகளை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமை தனிமை போன்ற காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எப்போதும் ஆன்லைனிலேயே இருக்க வேண்டியிருப்பதால் ஒருவித வெறுப்புணர்வும் அவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

மாணவர்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.

குறிப்பிட்ட காலத்தில் மாணவர்களுக்கு பாடத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும், எதிர்வரும் பரீட்சைகளில் நல்ல முறையில் மார்க் எடுக்க செய்ய வேண்டும் போன்றவை அவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.

மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளை சரி செய்ய பெற்றோர்கள் அவர்களுக்கு மாற்றுப்பணிகளை கொடுக்க வேண்டும். ஆன்லைனில் அல்லாத வி‌ஷயங்களில் கவனம் செலுத்த செய்ய வேண்டும். அவர்களுடைய உணர்வுகளை செவி கொடுத்து கேட்டு உரிய பதில் அளிக்க வேண்டும். சுதந்திர உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆசிரியர்களும் ஒவ்வொரு மாணவனிடமும் உள்ள உணர்வுகளை கேட்டறிய வேண்டும். ஆன்லைனில் பாடத்தை கவனிப்பது எப்படி என்பது குறித்து தெளிவாக சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் குறுகிய நேரம் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.