ராணுவ அத்துமீறல் தொடர்கிறது... மியான்மரில் ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை

ராணுவ அத்துமீறல் தொடர்கிறது... மியான்மரில் ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை

மியான்மரில் ராணுவ ஆட்சியின் அத்துமீறலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு அமைப்புகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.

இந்த போராட்டங்களுக்கு எதிராக கடும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முக்கிய பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படுகிறார்கள். எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல் துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. போராட்டத்துக்கு வருபவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பல்வேறு ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

நேற்று மியான்மர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாங்கோன் வணிகப் பகுதியில் மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

மக்கள் அமைதியாக நடத்திய போராட்டங்களை ஒடுக்க ராணுவம் புகை குண்டுகளை வீசியது. தடியடி மற்றும் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.

ராணுவத்தின் அத்துமீறிய துப்பாக்கி சூட்டில் நேற்று ஒருநாள் மட்டும் 38 பேர் பலியானதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. ராணுவத்தினர் கண்மூடித் தனமாக நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 34 உடல்கள் மருத்துவமனைக்கு வந்ததாகவும், 40 பேர் காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்தாலும் மக்கள் போராட்டங்களும் குறையவில்லை. ஜனநாயகத்தை மீட்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.