சமூகத்துக்குள் கொரோனாவை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் உண்டு - மக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு நோயாளர்களை பார்வையிட சென்ற உறவினர்கள் கூட தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்னும் சிலரின் PCR பரிசோதனை அறிக்கைகள் பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த அறிக்கையைப் பெற்ற பிறகு இன்னும் சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நபர்கள் பற்றிய தீர்மானத்தை எடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரண்டாவது அலை கொரோனா தொற்றுக்கான அடையாளம் காணப்படவில்லை என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே, இந்த மத்திய நிலையத்தில் கொரோனா பரவுவதற்கான அதிக வாய்ப்பில்லை என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்னும் சமூகத்துக்குள் எதிர்பாராத விதமாக கொரோனாவை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் இருப்பதால் முடிந்த வரை சுகாதார வழிகாட்டிகளை கடைப்பிடிக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் .