அப்படி போடு பாடகர் மேடையில் உயிரிழப்பு!

அப்படி போடு பாடகர் மேடையில் உயிரிழப்பு!

இந்தியத் திரையுலகின் பலமொழி பாடகர்களில் ஒருவரான கேகே என்று அழைக்கப்படுபவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொல்கத்தா மாநகரின் நஸ்ருல் மஞ்சா பகுதியில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே திடீரென மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

கேகே என்று அழைக்கப்படுபவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த 53 வயதான கேகே, தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடல் மூலம் தமிழில் கேகே அறிமுகமானார்.

மேலும் யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் இசையிலும் தமிழில் அவர் பாடியுள்ளார்.

காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க) உள்ளிட்ட அவர் பாடிய பாடல்கள் தமிழக ரசிகர்கள் இடையே பிரபலமானவை.

இந்நிலையில், கொல்கத்தா மாநகரின் நஸ்ருல் மஞ்சா பகுதியில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே, ரசிகர்கள் முன்னிலையில் பாடல்களை பாடினார்.

அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கச்சேரி முடிந்ததும் மயங்கி விழுந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவர் கடைசியாக பங்கேற்றிருந்த மேடை இசை நிகழ்ச்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

பாடகர் கேகேவின் திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.