ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை
ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இன்று (22) போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றினால் விசேட உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
போராட்டக்கார்கள் சிலர் கோட்டை பிரதேசத்தில் ஒன்று கூடி ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட ஏனைய கட்டிடங்களுக்குள் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளதாக, கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த போராட்டத்தை தடை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, போராட்டக்காரர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையில் மோதல் மற்றும் அமைதியின்மை ஏற்பட்டக்கூடும் என்பதால் இன்று காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள வீதிகளை மறித்து, பொதுமக்களுக்கும், பயணிகள் வாகனங்களுக்கும் இடையூறு விளைவிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் வளாகங்களுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறும், பொது மற்றும் தனியார் சேதங்களை ஏற்படுத்தக் கூடாது எனவும் 9 பிரதிவாதிகள் மற்றும் அவர்களுடன் கலந்து கொள்ளும் ஏனைய நபர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.