உள்ளூராட்சி தேர்தலுக்கு எதிரான மனு மீண்டும் மே வரை ஒத்திவைப்பு

உள்ளூராட்சி தேர்தலுக்கு எதிரான மனு மீண்டும் மே வரை ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு முன்னாள் இராணுவ கேணல் ஒருவர் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு விசாரணை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையிலான நீதிப்பேராணையை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுப் பெற்ற இராணுவ கேர்ணல் டப்ளியூ எம்.ஆர் விஜேசுந்தர தாக்கல் செய்த மனு இன்று உயர்நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இந்த மனு கடந்த 20 ஆம் திகதி எஸ் துரைராஜா மற்றும் சிரான் குணரத்ன உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இன்றைய தினத்திற்கு முன்னதாக அந்த மனுவை ஆராயுமாறு நகர்த்தல் பத்திரம் ஊடாக கோரப்பட்டது.

எனினும்,இன்றைய தினத்துக்கு முன்னதாக அதனை விசாரிப்பது அவசியமற்றது என மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தினர்.

தற்போதைய சூழல் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை என அண்மையில் தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றுக்கு அறிவித்தது.

எனவே, மனுவை ஆராய்வதற்காக முன்னர் திகதி குறிப்பிட்டப்படி இன்றைய தினமே அழைக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என சுட்டிக்காட்டும் மனுதாரர், தேர்தலை பிற்போடும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அங்கத்தவர்கள் உள்ளிட்ட 9 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.