மத்திய வங்கியின் முதலாவது நாணயக் கொள்கை வெளியீடு..!
இலங்கை மத்திய வங்கி தனது முதலாவது நாணயக் கொள்கை அறிக்கையை நேற்று(31) வெளியிட்டுள்ளது.
பணவீக்கம் மற்றும் பிற முக்கிய பொருளாதார மாறுபாடுகளின் நடத்தை மீதான மத்திய வங்கியின் கண்ணோட்டத்தை நாணயக் கொள்கை அறிக்கை, உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் தற்போதைய மைக்ரோ பொருளாதாரப் போக்குகள் மற்றும் அவற்றின் கண்ணோட்டத்தின் அடிப்படையில் முன்வைக்கிறது.

தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் போக்குகளைக் கருத்தில் கொண்டு, பணவீக்கம்மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த முன்னறிவிப்புகளுக்கு இடர்பாடுகளை மதிப்பீடு செய்வதே நாணயக் கொள்கை அறிக்கையின் நோக்கமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது மத்திய வங்கியின் நாணயக் கொள்கை உருவாக்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை அதிகரிப்பதுடன், பொதுமக்களின் பணவீக்க எதிர்பார்ப்புகளை உறுதிப்படுத்த உதவும் எனவும் மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு ஜூன் மாதத்தை தொடர்ந்து, இரண்டாவது மாதமாக ஏற்றுமதி வருவாய்ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
மேலும், வரவு செலவுத் திட்ட ஆதரவிற்காக உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டதன் மூலம், ஜூன் மாத இறுதிக்குள் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அளவு 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.