
2023 உலக கிண்ணத் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை!
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
லக்னோவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 262 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் நெதர்லாந்து அணி சார்பில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் அதிகபடியாக 70 ஓட்டங்களையும், லோகன் வான் பீக் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்ஷான் மதுஷங்க கசுன் ராஜித ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி 263 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் சதீர சமரவிக்ரம அதிகபட்சமாக 91 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றதுடன் பாத்தும் நிஸ்ஸங்க 54 ஓட்டங்களையும் சரித் அசலங்கா 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் நெதர்லாந்து அணி சார்பில் ஆர்யன் தத் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதற்கமைய இந்த உலக கிண்ண தொடரில் இலங்கை அணி தமது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.