சமரியின் வரலாற்று சாதனையுடன் இலங்கை இலகு வெற்றி
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஆசிய மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (2) நடைபெற்ற போட்டியில் இந்தோனேசிய மகளிர் அணியை 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இலகுவான வெற்றியைப் பெற்றது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை அணி நிர்ணயித்த 125 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலளித்த இந்தோனேசியா 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 49 ஓட்டங்கள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி முதல் விக்கெட்டுக்கு அமைத்த 18 ஓட்டங்களே அந்த இன்னிங்ஸின் அதிகபட்ச இணைப்பாட்டமாக பதிவானது.
அதன்பின்னர், மேலும் 31 ஓட்டங்களுக்குள் எஞ்சிய அனைத்து விக்கெட்டுகளையும் இந்தோனேசியா அணி இழந்தது.
இதில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து, தனது சிறந்த இருபதுக்கு 20 பந்துவீச்சைப்பதிவு செய்தார்.
அவர் 3.3 ஓவர்களில் 5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, ஹெட்ரிக் விக்கெட் உட்பட 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதற்கு முன்னர் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த தனிப்பட்ட பந்துவீச்சாக இருந்தது.
இது மகளிர் 20/20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது சிறந்த பந்துவீச்சாகப் பதிவாகியுள்ளதுடன், அவருக்கு முன்னர் 4 பந்துவீச்சாளர்கள் தலா 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இருப்பினும், ஐசிசியின் (ICC) முழு உறுப்பு நாடொன்றின் பந்துவீச்சாளர் பதிவுசெய்த சிறந்த பந்துவீச்சாக இது வரலாற்றில் இடம்பெற்றது.
மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாக, பிரேசில் வீராங்கனை லாரா கார்டோசோ, லெசோத்தோ மகளிர் அணிக்கு எதிராக 4 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.