இன்று யாழ். வரும் அநுரவிடம் பறந்த கோரிக்கை

இன்று யாழ். வரும் அநுரவிடம் பறந்த கோரிக்கை

யாழ்ப்பாணம் (Jaffna) - வலி வடக்கு பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (17.04.2025) வியாழக்கிழமை ஜனாதிபதி வருகை தரும் போது, யாழ் மாவட்ட கட்டளை தளபதியுடன் உரையாடி அப்பகுதி விவசாய காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

கடந்த மார்ச் மாதம் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வலி. வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஒரு பகுதி விவசாய காணிகளை விடுவித்து , ஆக்கங்களில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதேவேளை "உறுமய" காணி வழங்கப்படும் திட்டத்தின் ஊடாக ஒட்டகப்புலம் பகுதியில் 408 குடும்பங்களுக்கு 235 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்பட்டது.

இன்று யாழ். வரும் அநுரவிடம் பறந்த கோரிக்கை | Agriculture Lands Held By The Security Forces

விவசாய நடவடிக்கைகாக பலாலி வடக்கு, பலாலி கிழக்கு, பலாலி தெற்கு, வயாவிளான் மேற்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் காணிகள் விடுவிக்கப்பட்டன.

குறித்த விவசாய காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினர் கடுமையான நிபந்தனைகளுடன் கட்டுப்பாடுகளை விதித்தே விவசாய நிலங்களுக்கு மக்களை அனுமதித்துள்ளனர்.

குறிப்பாக, பின்மாலை பொழுதுகளின் பின்னர் காணிகளுக்குள் நிற்க முடியாது, விவசாய நிலங்களில் ஓய்வு எடுப்பதற்கு தற்காலிக கொட்டகைகளை அமைக்க அனுமதியில்லை, போன்ற கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன.

அத்துடன் குறித்த காணிகளை சுற்றி உயர் பாதுகாப்பு வலய வேலிகள் அகற்றப்படாமல் இருப்பதனால் , தமது விவசாய காணிகளுக்கு சுற்று பாதைகள் ஊடாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலைமைகளும் காணப்படுகிறது.

இன்று யாழ். வரும் அநுரவிடம் பறந்த கோரிக்கை | Agriculture Lands Held By The Security Forces

குறித்த வேலிகளை பின் நகர்த்த 18 மில்லியன் ரூபாய் செலவு என இராணுவத்தினர் மதிப்பீடு செய்து, நிதி கோரியுள்ள நிலையில், அந்நிதி இராணுவத்தினருக்கு வழங்கப்படாமையால் , இராணுவத்தினர் வேலியை பின் நகர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி, யாழ் . மாவட்ட கட்டளை தளபதியுடன் கலந்துரையாடி, விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்குள் சுதந்திரமாக சென்று விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.